Thookam Festival:கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் திருவிழா - 1,352 குழந்தைகளுக்கு விடிய விடிய 'தூக்க நேர்ச்சை'

By

Published : Mar 26, 2023, 10:03 AM IST

thumbnail

கன்னியாகுமரி: புகழ்பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனி மாதம் பரணி நட்சத்திர நாளில் தூக்கத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 'தூக்கத் திருவிழா' கடந்த 16ஆம் தேதி தொடங்கியது. இதன் 10ஆம் நாள் திருவிழாவான நேற்று (மார்ச்.25) மீனபரணியையொட்டி குழந்தைகளுக்காகான தூக்க நேர்ச்சை வெகு சிறப்பாக நடந்தது.

இங்குள்ள அம்மன் சந்நிதியில் குழந்தையில்லாத தம்பதிகள், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும், கிடைத்த குழந்தை மற்றும் மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டியும் பக்தர்கள் 'தூக்க நேர்ச்சை' செலுத்துகிறார்கள். பச்சிளம் குழந்தைகளை நேர்ச்சைக்கு கொடுத்த பிறகு, அந்தரத்தில் குழந்தைகளை தூக்கக்காரர்கள் கையில் வைத்துக்கொண்டு, கோயிலை வலம் வரும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும். 

சுமார் 40அடி உயரம் கொண்ட இரண்டு வில்களைக் கொண்ட வண்டியில், இரண்டு தூக்கக்காரர்கள் என 4 பேர் இந்த வில்லுடன் பிணைக்கப்பட்டு, அவர்களின் கைகளில் நேர்ச்சை குழந்தைகள் வழங்கப்படும். பின்னர், இந்த தேருடன் பக்தர்கள் சரண கோஷத்துடன், ஆலயத்தை ஒரு சுற்று சுற்றி வருவது தூக்க நேர்ச்சை திருவிழாவாகும். 

அந்தவகையில், தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த 1,352 குழந்தைகளுக்கு இந்த ஆண்டு தூக்க நேர்ச்சை வெகு சிறப்பாக நடந்தது. முன்னதாக, தூக்கக்காரர்கள் அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளினார். அதன் பின்பு, தூக்க நேர்ச்சை தொடங்கி, முதலில் நான்கு அம்மன் தூக்க நேர்ச்சை நடைபெற்றபிறகு, குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடைபெற்றது. விடிய விடிய 340 முறை இந்த தூக்க வில்லில் குழந்தைகளுடன் மூலக்கோயிலைச் சுற்றி கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்திலிருந்து இந்த திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில், கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையே இரண்டு மாநில அரசின் சார்பாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.