தூண்டில் பாலம் அமைப்பதில் மெத்தனம் - தூத்துக்குடி அமலிநகர் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் சுமார் 1,000 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் கடல் சீற்றத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால், மீன்பிடித் தொழிலுக்குச் சென்று விட்டு திரும்பும்போது கரையில் படகுகளை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் காயம் அடைவதாகவும் தெரிகிறது. இதனால், இந்தப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைத்துத் தர வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனால், கடந்த 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் மீன்வள மானிய கோரிக்கையில் 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் எந்த பணிகளும் நடைபெறாததால், இப்பகுதி மீனவர்கள் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில், இன்று(ஆகஸ்ட் 7) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சுமார் 200 படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 1.50 கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 18ஆம் தேதி ராமநாதபுரத்தில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் மீனவர்கள் மாநாட்டை புறக்கணித்து கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அமலி நகர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'தூண்டில் பாலம்' அமைக்கும் வரை வேலைநிறுத்தம்: தூத்துக்குடி மீனவர்கள் அறிவிப்பு