கார்த்திகை தீபம்: திருச்செந்தூர் கடற்கரையில் 25 அடி உயர சொக்கப்பனை! - 25 அடி உயர சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
🎬 Watch Now: Feature Video


Published : Nov 27, 2023, 7:22 AM IST
தூத்துக்குடி: கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் 25 அடி உயர சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை திருவிழா, நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருகோயிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. காலையில் மூலவர் மற்றும் சுவாமி ஜெயந்திநாதருக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் மகா மண்டபத்தில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் நாரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர், சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதையடுத்து இரவு 7.00 மணிக்கு கடற்கரையில் உள்ள 25 அடி உயர சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து, சண்முக விலாச மண்டபத்தில் இருந்த சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனை காட்டி வள்ளி-தெய்வானை அம்பாலுடன் எழுந்தருளி உள்பிரகாரம் வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.