புரட்டாசி மாத விஷேசம்..! ஈரோடு திம்மராய பெருமாளுக்கு சிறப்பு பூஜை..! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே, கீழ் முடுதுறை திம்மராய பெருமாள் கோயிலில், நேற்று (செப்.23) புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அரிசி, பருப்பு, காய்கறிகளை தாசர்களுக்கு படையலிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
புரட்டாசி மாதம், முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அனைத்து வைணவ தலங்களிலும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கீழ் முடுதுறை திம்மராயப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திம்மராய பெருமாளுக்கு திருமஞ்சன சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
திம்மராய பெருமாளுக்கு பால், பன்னீர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கருட வாகனத்தில் கோயிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, உச்சிக்கால பூஜை நடைபெற்றது. மேலும், பக்தர்கள், தங்கள் விளை நிலங்களில் விளைந்த அரிசி, பருப்பு, காய்கறிகளை கோயில் வளாகத்தில் தாசர்களுக்கு படையலிட்டு, தாசர்களிடம் இருந்து சிறிதளவு காய்கறி, அரிசி, பருப்பு வகைகளை மடியேந்தி பெற்றனர். புரட்டாசி முதல் சனி என்பதால் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.