சைக்கிள் ஸ்டாண்டாக மாறிய அம்மா பூங்கா.. தீர்த்தமலையில் நடப்பது என்ன? - theerthamalai amma park to two wheeler stand
🎬 Watch Now: Feature Video
தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தீர்த்தமலை ஊராட்சியில், சிறியவர்களின் பொழுதுபோக்கிற்காக அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவுடன் இளைஞர்களுக்கு உடற்பயிற்சிக் கூடம், கடந்த அதிமுக ஆட்சியில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த நிலையில், தற்போது தீர்த்தமலை அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் ஆகிய இரண்டும், தீர்த்தமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. அது மட்டுமல்லாமல், கோயிலுக்கு வரும் பக்தர்கள் நிறுத்தும் இருசக்கர வாகனங்களுக்கு ஒப்பந்ததாரர் மூலம் 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு வரும் வாகனங்கள் அருகில் உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் முழுவதும் நிறுத்த அனுமதிக்கப்பட்டு, அவற்றுக்கும் ஒப்பந்ததாரர் மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, அம்மா பூங்கா மற்றும் அதன் அருகில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை எதற்காக பயன்படுத்த வேண்டுமோ, அதற்காக மட்டுமே பயன்படுத்த உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.