சிறுமி மரணம் எதிரொலி.. அல்லேரி மலை கிராமத்திற்கு சாலை அமைக்க அளவீடு பணி.. மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம்! - சர்வேஸ் போர்ட்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 1, 2023, 11:57 AM IST

வேலூர்: அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட அல்லேரி மலை கிராமத்தை அடுத்த அத்திமரத்து கொல்லை பகுதியை சேர்ந்தவர் விஜி - பிரியா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்னறை வயதில் தனுஷ்கா என்னும் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில், மே 27-ஆம் தேதி இரவு தனுஷ்காவை விஷப் பாம்பு கடித்ததில், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போதிய சாலை வசதி மற்றும் உரிய மருத்துவ வசதி இல்லாததன் காரணமாக சிறுமி உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து, சிறுமியின் உடலை மலைப்பகுதிக்கு கொண்டு செல்லவும் போதிய சாலை வசதி இல்லாததால் 10 கி.மீ தூரம் உடலை கையால் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்து உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

அதன் தொடர்ச்சியாக மே 29-ஆம் தேதி சாலை அமைப்பதன் முதல் கட்டமாக, வனப்பகுதிக்குள் சாலையை அளவிடும் பணி நடைபெற்றது. அப்பணி நிறைவடைந்த நிலையில், அளவீடு செய்யப்பட்டதன் விவரம் மற்றும் சாலை அமைக்க தேவையான முழு விவரம் மத்திய அரசின் ‘சர்வேஸ் போர்ட்’ என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதில் அல்லேரி மலை பகுதியின் அடிவாரத்தில் இருந்து அத்திமரத்து கொல்லை, பலாமரத்துவட்டம், நெல்லிமரத்து கொல்லை என மொத்தம் 7.1 கிலோ மீட்டருக்கு அளவீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 கிலோ மீட்டர் வனப்பகுதியிலும், 2.1 கிலோ மீட்டர் பட்டா இடத்தில் வருவதாகவும் மற்றும் மழை காலங்களில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் இரண்டு இடத்தில் பெரிய கல்வெட்டும், 7 இடத்தில் சிறிய அளவிலான பைப் கல்வெட்டும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சாலை அமைய உள்ள 6 மீட்டர் அகலத்திற்குள் 34 மரங்கள் உள்ளதால் அவற்றை அகற்ற வனத்துறை தக்க மதிப்பீடு வழங்க வேண்டும் என்றும் பின்னர் அதற்கான தொகை வனத்துறைக்கு செலுத்தப்பட்டு மரங்களை அகற்றி விபத்துக்களை தவிக்க மொத்தம் 4 இடத்தில் சாலையோர தடுப்புகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த முழு விவரங்கள் அனைத்தையும் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மத்திய அரசின் சர்வேஸ் போர்ட் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து முடித்துள்ளனர். இதற்குப் பின் மத்திய அரசு விதிவிலக்குடன் அனுமதி அளித்தபின் அடுத்த கட்ட சாலை அமைக்கும் பணிகள் விரைந்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறைக்குள் வரும் ஐந்து கிலோ மீட்டர்களுக்கு சுமார் 5 கோடி திட்ட மதிப்பீடும், மொத்தமாக ஊள்ள 7.1 கி.மீ தூரத்திற்கு சுமார் 12 கோடி தேவைபடும் என அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.