பள்ளி இடை நின்ற மாணவியை மீட்டு வந்த போலீஸ்... பொதுமக்கள் பாராட்டு! - loganathan
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: கரோனாவிற்குப் பின் பள்ளியில் மாணவர் சேர்க்கை விகிதமானது குறைந்து கொண்டே வருகிறது. குடும்பச் சூழ்நிலை காரணமாக மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கூலி வேலைக்குச் செல்கின்றனர். இந்நிலைத் தொடர்ந்து கொண்டே வருவதால் பள்ளி வருகைப்பதிவேட்டில், மாணவர்களின் வருகை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த லோகநாதன் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார். அவரது மனைவி மரணத்திற்குப் பின் குடும்பச்சூழல் மிகவும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அவரது மகள் தாமரைக்கனி, நாசரேத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். குடும்பச் சூழ்நிலை காரணமாக கடந்த மூன்று மாத காலமாக தாமரைக்கனி பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி அலுவலக எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளியிலிருந்து இடை நின்ற மாணவர்கள் குறித்து காவல்துறையினர் கணக்கெடுத்தனர். இதில் தாமரைக்கனி பள்ளிக்குச் செல்லாமல் இடை நின்றது தெரிய வந்தது. உறவினர் வீட்டில் தங்கி இருந்த தாமரைக்கனியை அழைத்துப்பேசி மீண்டும் அவரைப் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் மேற்கொண்டார். இதனால் தாமரைக்கனி நாசரேத்தில் உள்ள தனியார் பள்ளியில் படிப்பதற்காக மீண்டும் சென்று வருகிறார்.
ஏற்கனவே கருங்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரை ஆழ்வார்திருநகரி டீக்கடையில் வேலை செய்ததை அறிந்து அவரை மீண்டும் பள்ளியில் சேர்க்க டிஎஸ்பி மாயவன் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, தாமரைக்கனியை மீண்டும் பள்ளியில் சேர்த்த டிஎஸ்பி மாயவன் தலைமையிலான போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.