பாஜக கவுன்சிலருக்கு கேக் ஊட்டிய திமுக மேயர்.. தஞ்சாவூரில் ஒரு சுவாரஸ்யம் - கேக் வெட்டி கொண்டாடிய திமுக மேயர்
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் ராமநாதன் தலைமையில், ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம்பூபதி முன்னிலையில் மாமன்ற கூட்ட அரங்கில் இன்று (மே 25) நடைபெற்றது. அப்போது மேயர் ராமநாதன் பேசும்போது, 'மின்னணு மேலாண்மையின் ஒரு பகுதியாக மாமன்ற கூட்ட அறிவிப்புகள், மாநகராட்சி தீர்மான நகல்கள் ஆகியவை இனிவரும் காலங்களில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு இமெயிலில் அனுப்பி வைக்கும் பணி நடைபெறும் என்றார். வரும் 30 ஆண்டுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாத வகையில் மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக' தெரிவித்தார்.
இவரைத்தொடர்ந்து பேசிய ஆணையர் சரவணக்குமார், 'தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் வகையில், கொள்ளிடம் ஆற்றில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் குடிநீர் தொட்டி மூலம் நீர் சேகரிக்கப்பட்டு வீடுகள்தோறும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் திமுக, அதிமுக, காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் பாஜக கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பல்வேறு கோரிக்கைகள், பிரச்னைகளை வலியுறுத்தி பேசினர். இந்நிலையில், பாஜக கவுன்சிலரும், பாஜக மாவட்ட தலைவருமான ஜெய்சதிஷ் என்பவருக்கு இன்று பிறந்த நாள். இந்த நிலையில், மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற அவருக்கு பிறந்தநாள் என்பதை அறிந்த மேயர் ராமநாதன் உடனே, பணியாளர்கள் மூலம் கேக் வாங்கிட ஏற்பாடு செய்தார். மாமன்ற கூட்டத்திற்கு பின், பாஜக கவுன்சிலர் ஜெய் சதீஷ் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்களையும் கூட்ட அரங்கின் மேடைக்கு வரவைத்து பிறந்தநாள் பாட்டு பாடி, பாஜக கவுன்சிலருக்கு மேயர் ராமநாதன், கேக் ஊட்டி சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
அதைப்போல் ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்ட திமுக, அதிமுக கவுன்சிலர்கள் பாஜக கவுன்சிலருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த திடீர் பிறந்த நாள் விழாவால் பாஜக கவுன்சிலர் ஜெய்சதிஷ் நெகிழ்ச்சியடைந்தார். தஞ்சாவூர் மாமன்ற கூட்டம் எப்போதும் பரபரப்பாக பிரச்சனையுடன் முடிவடையும், ஆனால் இந்த விழாவால் கட்சி பாகுபாடு இன்றி மாமன்ற உறுப்பினர்கள் கலகலப்புடன் காணப்பட்டு உற்சாகமாக இருந்தனர்.