புளியங்குடி ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் சுவாதி பூஜை; கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலம்..!
🎬 Watch Now: Feature Video
Published : Jan 7, 2024, 8:25 AM IST
தென்காசி: புளியங்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலில், ஐப்பசி மாத சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை வெகுவிமரிசையாக நேற்று (ஜன.6) நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அஹோபிலத்தில் நரசிம்மராக அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு, உக்கிரம் தணிந்து சாந்தமானது புளியங்குடியில் தான் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
குறிப்பாக, மற்ற அனைத்து ஆலயங்களிலும் மேற்கு நோக்கி எழுந்த அருளும் நரசிம்மர், இந்த கோயிலில் மட்டும் கிழக்கு நோக்கி எழுந்தருளியிருப்பது, இக்கோயிலின் தனிச்சிறப்பு. மேலும் எதிரி தொல்லை, குன்ம நோய், தொழில், வியாபார நஷ்டம் போன்றவற்றால் அவதிப்படும் பக்தர்கள் புளியங்குடி லட்சுமி நரசிம்மரை வழிபட்டால், அனைத்து இன்னல்களும் நீங்கி நிச்சயமாக பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
அந்தவகையில், ஐப்பசி மாத சுவாதி பூஜையை முன்னிட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுந்தரராஜ பெருமாள், பூதேவி மற்றும் ஸ்ரீதேவியுடன் கோயில் பிரகாரம் வழியாக வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். இப்பூஜை சத்ரு பயம் நீக்கும் எனக் கூறப்படுகிறது.
பின்னர், சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நரசிம்ம பெருமாளை வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறுவர் சிறுமியர்களின் கலை நிகழ்ச்சிகளை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கண்டுகளித்தனர்.