பள்ளியில் மாணவர்களுக்கு முடி திருத்தம் - நூதனமாக யோசித்த தலைமையாசிரியர்!
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் கே.எல்.கே அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்தப் பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு வரும் மாணவர்கள் உடை மற்றும் சிகை அலங்காரம் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவர்களிடையே ஆசிரியர்கள் தினசரி இதனை வலியுறுத்தி வந்துள்ளனர்.
இருப்பினும், ஒரு சில மாணவர்கள் தங்களது முடி அலங்காரத்தை மாற்றிக் கொள்ளாமல் ஸ்டைலாக வைத்திருந்தனர். இதனை அடுத்து தலைமையாசிரியர் ராமமூர்த்தி, ஒவ்வொரு வகுப்புகளுக்கும் சென்று சிகை அலங்காரத்துடன் இருப்பவர்கள் மற்றும் இதுவரை முடி வெட்டாமல் இருப்பவர்கள் என 100க்கும் மேற்பட்ட மாணவர்களை தேர்வு செய்தார். அவர்களது பெற்றோர்களிடம் செல்போனில் முடி திருத்தம் செய்வதற்கு ஒப்புதல் பெற்றார். பின்னர், இந்த மாணவர்களுக்கு பள்ளி மைதானத்தில் முடித்திருத்தம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், முடி திருத்தம் செய்ய வந்த சலூன் கடைக்காரரின் தலை முடியே அவரது முகம் முழுவதும் பரவி இருந்ததால், அவர் மாணவர்களுக்கு முடி வெட்டும்போது அவரின் முடியே இடையூறாக இருந்தது. இதனைக் கண்ட மாணவர்கள் சிலர், ‘முதலில் அவருக்கே முடி வெட்டணும். நாங்கள் வெட்டி விடவா?’ என கிண்டல் செய்தனர்.
இதனையடுத்து முடி வெட்டும் நபரே, தனது தலை முடியை ரப்பர் பேண்ட் போட்டு கட்டிக் கொண்டு மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்தார்.