ஆயுத பூஜை: நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் கதம்ப மாலை கட்டும் பூக்களுக்கு கடும் கிராக்கி! - திண்டுக்கல் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
Published : Oct 22, 2023, 6:55 PM IST
திண்டுக்கல்: நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் கதம்ப மாலை கட்டுவதற்குப் பயன்படும் பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டியதால் பூக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. இதனால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. நாளை ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கதம்ப மாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு கடும் கிராக்கி நிலவியது.
அரளிப்பூ, செண்டுமல்லி, செவ்வந்தி பூ, வாடாமல்லி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. கடந்த காலங்களில் ஒரு பை 10 ரூபாய்க்கு விற்பனையான அரளிப்பூ, அதிகபட்ச விலையாக ரூபாய் 450 முதல் 500 வரை விற்பனையானது.
அதே போல் செண்டுமல்லி 100 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை பூ 80 ரூபாய்க்கும், செவ்வந்திப்பூ 150 ரூபாய்க்கும், வாடாமல்லி 60 ரூபாய்க்கும், துளசி 60 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 150 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 300 ரூபாய்க்கும், சம்பங்கி பூ 200 ரூபாய்க்கும் விற்பனையாகின. கடந்த காலங்களில் அரளி, செண்டு மல்லி உள்ளிட்ட பூக்களுக்கு விலை கிடைக்காமலிருந்த நிலையில், இந்த ஆயுத பூஜை விழா பூ விற்பனை தங்களுக்கு ஒருநாள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக விவசாயிகள் மற்றும் வியாபாரி கூறுகின்றனர்.