நத்தம் அருகே பாரம்பரிய நடனத்துடன் நடந்த மாலை கும்பிடு விழா!
Published : Sep 29, 2023, 12:10 PM IST
திண்டுக்கல்: நத்தம் சாணார்பட்டி அருகே உள்ள விராலிப்பட்டி கிராம் உள்ளது. ஸ்ரீ பாப்பம்மாள் ஸ்ரீ கன்னக்கள் கோயிலில் மாலை கும்பிடு விழா 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர், வணங்கி வரும் இந்தக் கோயிலில், கடந்த 26 ஆம் தேதி, சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று (செப்.28) எருதோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக முன்னதாகவே, எட்டப்ப நாயக்கர் விராலிப்பட்டி மந்தை, கோட்டைப்பட்டி மந்தை, புதூர் நாயக்கர் மந்தை, தோகைமலை உள்ளிட்ட 14 மந்தைகளைச் சேர்ந்த கோயில் காளைகள் அழைத்து வரப்பட்டன. பின்னர் கோயில் முன்பாக நடைபெற்ற எருது சந்திப்பு நிகழ்ச்சியில் பாரம்பரிய முறையில், காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. இதனை அடுத்து, காளைகள் தவசிமடை சிவன் கோயிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கொத்து கொம்புவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பின்னர் இந்த காளைகள் கொத்து கொம்புவில் இருந்து தோரணவாயிலை நோக்கி அவிழ்த்து விடப்பட்டது. இதில் முதலாவதாக வந்த காளைக்கு மஞ்சள் தூவி, எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் திண்டுக்கல், மணப்பாறை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.