சனி பிரதோஷம்: தஞ்சை பெரிய கோயிலில் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் - நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
🎬 Watch Now: Feature Video
தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் கொடிமரம் முன்பு, நந்தி மண்டபத்தில் மகா நந்தியம்பெருமான் எழுந்தருளி உள்ளார்.
இந்நிலையில் நேற்று மாசி மாதம் மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு ஆயிரம் லிட்டர் பால், விபூதி, மஞ்சள்பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், கரும்பு சாறு, தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க பக்தர்களால் வழங்கப்பட்ட அருகம்புல், தாமரை, வில்வ இலை, மலர்கள் இவற்றை மாலையாக நந்தியம்பெருமானுக்கு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரையில் அமர்ந்து நந்தியம்பெருமானை வழிபட்டனர்.
மேலும், மகா சிவராத்திரி பெருவிழா நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், நந்தி மண்டபத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், தஞ்சை திலகர் திடலில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, இரவு 4 கால பூஜை அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. இதனால், பெரிய கோயில் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டம் வெள்ளம்போல் காட்சியளித்தது.