தென்காசியில் தேவாலயத்தில் கொண்டாடப்பட்ட 'சமத்துவ பொங்கல்'..! திருப்பலியும் பொங்கலும் வைத்து வழிபாடு - Hindus
🎬 Watch Now: Feature Video
Published : Jan 16, 2024, 11:35 AM IST
தென்காசி: சுரண்டை அடுத்த வெள்ளாளங்குளம் கிராமத்தில் உள்ள 'புனித சூசையப்பர்' தேவாலயத்தில் 'சமத்துவ பொங்கல் விழா' சிறப்பாக நேற்று (ஜன.15) நடைபெற்றது. இதில், வெள்ளாளங்குளம் கிராமம் மட்டுமில்லாது சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். முன்னதாக, தேவாலயத்தில் இந்த ஆண்டிற்கான திருப்பலி நடைபெற்றது, அதிலும் மக்கள் எந்தவித பேதமும் இன்றி கலந்து கொண்டனர்.
பின்னர் ஊர் பொதுமக்கள், தேவாலய நிர்வாகிகள் என அனைவரும் ஒன்று கூடி, மேளதாளங்கள் முழங்க வீதியுலா சென்று வெள்ளாளங்குளம் கிராமத்தில் மாணவ, மாணவிகள் படிப்பதற்காக பள்ளிக்கூடம் கட்டி கொடுத்த மறைந்த மரிய ஜோசப் பாண்டியனின் சிலைக்கு, பாதிரியார் பிரான்சிஸ் ஜூப்ளி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவருக்கு வெள்ளங்குளம் கிராம மக்கள் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அக்கிராமத்தில் வசிக்கும் 800 குடும்பங்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் தேவாலயம் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. அப்போது விழாவில் பேசிய தேவாலய அருட்தந்தை ஜூப்ளி, "ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் திருப்பலி நடைபெறும் போது இந்த தேவாலயத்தில் மட்டுமே, பட்டை அடித்தபடி மக்கள் திருப்பலி முடியும் வரை பங்கேற்பார்கள். இந்த நிகழ்வு வேறு எந்த தேவாலயத்திலும் காண முடியாதது" எனப் பெருமிதம் கூறினார்.