ஈரோட்டில் அரசு பள்ளி ஆசிரியர் மரணத்தில் மர்மம்? உறவினர்கள் சாலைமறியல் - Erode Govt school teacher Karthik
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: பாசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர், கார்த்திக். இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகேயுள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது செல்போனுக்கு வந்த அழைப்பை தொடர்ந்து வீட்டை விட்டு சென்ற கார்த்திக், சோளங்கபாளையத்தில் உள்ள ரயில் பாதையில் நேற்று (ஜூலை 10) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கார்த்திக் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பாக அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், கார்த்திக் கைகள் அறுக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும், இதனால் தற்கொலை வழக்காக போலீசார் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், கார்த்திக் மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும், போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதும் கார்த்திக்கின் உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ போராட்ட இடத்திற்கு வந்த போலீசார், ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கார்த்திக்கின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பரபரப்பு ஏற்பட்டது.