பச்சிளம் குழந்தைகள் வார்டில் எலி தொல்லை - நாமக்கல் அரசு மருத்துவமனையில் அவலம்!
🎬 Watch Now: Feature Video
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் வார்டில் அதிகரித்த எலி தொல்லையை தடுக்க மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இங்கு நாமக்கல் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுவர். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட பிரசவம் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டில் எலி தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பிரசவம் முடிந்து பச்சிளம் குழந்தைகள் வார்டில் குழந்தையுடன் அவர்களது தாய் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது பைகள், குழந்தைகளான மெத்தை விரிப்புகள், தலையணை மற்றும் உணவுப்பொருட்கள் போன்றவற்றை அங்குள்ள எலிகள் கடித்து நாசம் செய்வதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், எலிகளின் கழிவுகள் குழந்தைகளின் மெத்தை விரிப்புகளில் பட்டு துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது குறித்து பலமுறை மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தாலும், அவர்கள் பொதுமக்களிடம் கடிந்து கொள்வதாகவும் எனவே, பச்சிளம் குழந்தைகள் வார்டில் உள்ள எலிகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.