கலவை திரெளபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா - தீயில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் - Ranipet news
🎬 Watch Now: Feature Video
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேல்நேத்தப்பாக்கம் கிராமத்தில் சுமார் 500 வருடங்கள் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த பிரசித்தி பெற்ற கோயிலில், அக்னி வசந்த விழா கடந்த மே 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்தது.
தொடர்ந்து திரௌபதி, சுபத்திரை திருக்கல்யாணம், தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி மற்றும் துரியோதனன் படுகளம் உள்ளிட்ட திருவிழாக்கள் நடைபெற்றன. இந்த நிலையில், மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கடந்த 16 நாட்கள் காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திரௌபதி அம்மனின் பூங்கரகத்தை தலையில் சுமந்து கொண்டு, பம்பை உடுக்கை உடன் தீயில் இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இந்த தீமிதி திருவிழாவில் மேல் நேத்தப்பாக்கம் கிராமத்தைச் சுற்றியுள்ள அகரம், டி.புதூர், கே.வேளூர், ஒயலை மற்றும் கரிகந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.