‘புதிய நாடாளுமன்ற கட்டடம் ஒரு ஊதாரித்தனமான செலவு’ - ஆ.ராசா எம்பி
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இன்று (மே 24) பார்வையிட்டார். மேலும், புதிய சாலை அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டி இருப்பது ஊதாரித்தனமான செலவு என்று சாடினார். நேரு பெயர் இருக்கக்கூடாது, இந்திரா காந்தி பெயர் இருக்கக்கூடாது என திட்டம் தீட்டுவதாக தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேரு எத்தனை ஆண்டு காலம் இந்த இருக்கையில் அமர்ந்திருந்தார் என செப்பு பட்டயம் உள்ளதாகவும், இதெல்லாம் பாஜகவினரின் கண்களை உறுத்துவதாகவும், ஆகவே, மதச்சார்பற்ற தலைவர்களின் வரிசையில் உள்ள பெயர்களில் யாராக இருந்தாலும் அதை எல்லாம் அழிக்க வேண்டும் என நினைப்பதாக குற்றம்சாட்டினார். இதுதான் மதவாத மோடி அரசின் நோக்கம் என்றும் தெரிவித்தார். இதற்கெல்லாம், வரும் 2024-ல் ஒரு முடிவு வரும் என்றும் அந்த முடிவை கொடுக்கக்கூடிய ஆற்றல்மிக்க தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் உள்ள ஆலைகளிலிருந்து கழிவு நீர் பவானி ஆற்றில் கலப்பது குறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர், சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை அழைத்து பேசியுள்ளதாக கூறினார். இதற்கான ஆய்வு மேற்கொண்டு இனிமேல், பவானி ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். அப்போது பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்டதற்கு "நான் இல்லை"என நகைச்சுவையாக பதிலளித்தார்.