சமூக ஆர்வலர்கள் பெயரில் பணம் கேட்டு மிரட்டல்: குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்! - quarry and crusher owners down the shutters
🎬 Watch Now: Feature Video
தேனி: சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் என்ற பெயரில், சமூக விரோதிகள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், தமிழக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கும் விதிமுறைகளை, சிறிய அளவிலான கல்குவாரிகள் நடத்துபவர்களுக்கும் விதிக்கப்படுவதாகவும் கூறி தமிழக கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் சங்கம் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா பகுதிகளில் செயல்பட்டு வரும் 5க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், கிரஷர்கள் மூடப்பட்டது. அனைத்து கல்குவாரிகளும், கிரஷர்களும் மூடப்பட்டதால் தேனி மாவட்டத்தில் பெரியகுளத்தில் மட்டும் சுமார் 20 லட்சத்திற்கும் மேலாக வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்குவாரிகளை நம்பி பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் மூடப்பட்டுள்ளதால், பெரியகுளம் பகுதியில் விவசாயத்திற்கு அடுத்த படியாக நடைபெறும் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுவதால், இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.