புரட்டாசி முதல் சனிக்கிழமை; கோட்டை அழகிரிநாதர் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!
🎬 Watch Now: Feature Video
சேலம்: சேலம் மாநகர் பழைய பேருந்து நிலையம் அருகே அருள்மிகு கோட்டை அழகிரிநாதர் சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இது நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோயில். பல்வேறு இதிகாசங்களில் குறிப்பிடப்பட்ட கோயில் என்பதால், இங்கு எப்போதும் பக்தர்கள் வருகை அதிகமிருக்கும். ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவதைப்போலவே, இந்த திருக்கோயிலிலும் புரட்டாசி மாதத்தில் பல்வேறு சிறப்பு வைபவங்கள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று (செப்.23), கோட்டை அழகிரிநாதர் சுந்தர்ராஜ பெருமாளுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சுந்தர்ராஜ பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
பின்னர் கருவூலத்தில் உள்ள சுந்தர்ராஜ பெருமாளுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆஞ்சநேய பெருமாளுக்கும் முத்தங்கி அலங்காரம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவமூர்த்தியான ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சுந்தர்ராஜ பெருமாளுக்கு தங்க அங்கிக் கவசம் சாத்துப்படி நடைபெற்றது.
பட்டாச்சாரியார் வேதங்கள் முழங்க அர்ச்சனைகள் நடைபெற்றன. பின்னர், சுந்தர்ராஜ பெருமாளுக்கும், உற்சவ மூர்த்திக்கும், ஆஞ்சநேயருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால், சேலம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, ஸ்ரீ ராம பக்த சேவா சபா சார்பில் பெருமாளின் பக்தி பாடல்கள் பாடப்பட்டன. திருக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. புரட்டாசி மாத வைபவத்தை திருக்கோயில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.