Police rescue child missed by elder people: முதியவர்கள் தவறவிட்ட பேரக்குழந்தையை மீட்டு ஒப்படைத்த காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு! - Elderly people missed their grandson
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: மூங்கில்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் தங்கள் பேரக்குழந்தையை தவறவிட்ட நிலையில் குழந்தையை மீட்டு முதியவர்களிடம் ஒப்படைத்த போக்குவரத்து காவலரை, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பாராட்டினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் தங்களது தோட்டத்தில் விளைந்த கீரையை எடுத்துக்கொண்டு அதனை மயிலாடுதுறை நகரில் விற்பனை செய்வதற்காக சென்று உள்ளனர். உடன் தங்களது பேரக்குழந்தை மகேஸ்வரன் என்கிற 4 வயது சிறுவனையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
மயிலாடுதுறை கண்ணாரத்தெரு முக்கூட்டு என்ற பகுதிக்கு வந்தபோது பேரன் மகேஸ்வரனை அவர்கள் தவற விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அச்சிறுவன் போக்குவரத்து நிறைந்த அச்சாலையை அழுதபடியே கடந்து சென்றுள்ளார். இதைக்கண்ட அப்பகுதியில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் முத்துகிருஷ்ணன் என்பவர் பதறிப்போய் உடனடியாக சிறுவனை மீட்டு பாதுகாப்பாக அமர வைத்து, சிறுவனுக்கு ஆறுதல் கூறி விவரங்களை கேட்டறிந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து அவ்வழியாக சிறுவனை தேடி பதறியபடி வந்த சிறுவனின் தாத்தா, பாட்டியிடம் சிறுவனை ஒப்படைத்து பாதுகாப்பாக அழைத்துச் செல்ல அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். போக்குவரத்தை சீர்செய்வதுடன் தனது கடமை முடிந்துவிட்டது என கருதாமல் சாலையில் அழுதபடி சென்ற சிறுவனை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவலரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.