பச்சை நிறமாக மாறிய புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பு ஆறு! - todays news in tamil
🎬 Watch Now: Feature Video
Published : Jan 4, 2024, 5:00 PM IST
புதுச்சேரி: நோணாங்குப்பம் சுண்ணாம்பு ஆறு பகுதியில் ரசாயனக் கழிவுகள் கலக்கப்பட்டுள்ளதால், திடீரென ஆறு பச்சை நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே நோணாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சுண்ணாம்பு ஆற்றில், சில மர்ம நபர்கள் ரசாயனக் கழிவுகளை கலந்ததால் ஆற்றங்கரையில் பெரும்பாலான பகுதிகள் பச்சை நிறமாக காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மீன் இறந்து போகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் சுற்றுச்சூழல் பொறியாளர்களும் இந்த வழியாக சென்று வருகின்றனர். ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் செல்கின்றனர். இரவு நேரங்களில் இப்பகுதியில் ரோந்துப் பணியில் காவல் துறையினர் அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும். இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களைக் கண்டுபிடித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.