Video: எல்ஈடி டிவி திருடிய கும்பல்... வீடியோவில் இருந்து வண்டியின் எண்ணைப் பார்த்து விரட்டிப் பிடித்த போலீஸ்!
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: பெரியபாளையம் அடுத்த கற்குழி பகுதியில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சதாம் என்பவர் தங்கி வந்துள்ளார். இவர் தமது நண்பர் ஒசாம்மா என்பவருடன் இணைந்து ஜவுளி மற்றும் மின் சாதனப்பொருட்களை கடைகளில் வாங்கி, இருசக்கர வாகனத்தில் மக்களுக்கு, வீடு தேடி எடுத்துச்சென்று விற்பனை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் பெரியபாளையம் அருகே வடதில்லை என்ற கிராமத்தின் அருகே தமது நண்பருடன் வாடிக்கையாளர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக பெரிய எல்ஈடி டிவி ஒன்றை வாங்கி எடுத்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்து இவர்களை வழிமறித்த கும்பலை கத்தியைக் காட்டி, மிரட்டி எல்ஈடி டிவியை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
இது குறித்து சதாம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்தின் சுற்றுப்பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தினர். குற்றவாளிகள் எல்ஈடி டிவியை திருடிச் செல்லும் வீடியோவை கொண்டு, இருசக்கர வாகனத்தை கண்டறிந்து குற்றவாளிகளைத் தேடினர்.
அந்த வாகனத்தின் பதிவெண்ணைக் கண்டறிந்து அந்த உரிமையாளரை தொடர்பு கொண்டு வாகனத்தை தற்போது வைத்துள்ளவரின் செல்போன் எண் மூலம் குற்றவாளிகள் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். குற்றவாளிகள் அருகில் ஏரியில் இருப்பதை அறிந்த காவல்துறையினர் ஏரியில் குதித்து, அங்கிருந்து தண்ணீரில் தப்பிச் செல்ல முயன்ற இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் திருடி பதுக்கி வைத்த எல்ஈடி டிவி பறிமுதல் செய்யப்பட்டது.
மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜதுரை (31), தாணிப்பூண்டியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் (30), ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சேரன்பாளையம் பகுதியை சேர்ந்த கணேஷ் (20) என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தீக்கிரையான 30 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி.. திருத்தணி அருகே நிகழ்ந்த கோர விபத்து!