Video: பின்னணி பாடகர் பென்னி தயாளை பதம் பார்த்த ட்ரோன் கேமரா! - சினிமா செய்தி
🎬 Watch Now: Feature Video
சென்னை: பிரபல பின்னணி பாடகர் பென்னி தயாள், தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி வருபவர். அதுமட்டுமின்றி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாடல் சம்பந்தமான நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தான் இவரை அறிமுகப்படுத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் 3,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் இவர் நேற்று சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பல்வேறு பாடல்களை அவர் பாடிக் கொண்டிருக்கும் போது விழாவில் பறந்து கொண்டு இருந்த ட்ரோன் கேமரா ஒன்று எதிர்பாராத விதமாக பென்னி தயாளின் பின் கழுத்தில் மோதியது. இதில் பென்னி தயாள் பதற்றமாகி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை வேகமாக பரவியது.
இதுதொடர்பாக அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, "நேற்று நிகழ்ச்சியில் நான் பாடிக்கொண்டு இருக்கும் போது ட்ரோன் கேமரா திடீரென வந்து எனது பின் கழுத்தில் மோதியது. இதனால் எனது பின் கழுத்தில் லேசான ரத்தம் வந்தது. உடனே மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டேன். தற்போது நலமுடன் உள்ளேன்" என்று தெரிவித்தார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள பென்னி, "எனது உடல்நிலை குறித்து கேட்ட அனைவருக்கும் நன்றி. விழாவின் போது ட்ரோன் கேமரா எனது பின் கழுத்தில் தாக்கியது. அதனை தடுக்க முயன்றபோது எனது இரண்டு விரல்களில் காயம் ஏற்பட்டது. தற்போது நலமாக இருக்கிறேன். மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வேலை தெரிந்த தொழில்முறை ஆபரேட்டர்களை பணியில் அமர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். மேலும் நாங்கள் பாடகர்கள் தான். பெரிய நடிகர்களுக்கு செய்வது போல் பெரிய ஏற்பாடெல்லாம் வேண்டாம். சாதாரண ஏற்பாடுகளை மட்டுமே செய்தால் போதும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.