நெகிழி இல்லா திருப்பத்தூர்.. 3000 பேர் பங்கேற்ற மினி மாரத்தான்! - tirupattur
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. திருப்பத்தூர் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வேர்கள் அறக்கட்டளை இணைந்து நெகிழி இல்லா திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்கவும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இன்று காலை (மே 14) 3000-க்கும் மேற்பட்டோர், இந்த மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்றனர்.
இந்த மாரத்தான் போட்டியைத் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.
இதில் சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், ஜூனியர் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. சீனியர் பிரிவில் வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், ஜூனியர் பிரிவில் வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக ஐந்தாயிரம் ரூபாயும் மற்றும் வெற்றிக் கோப்பையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மஞ்சப்பை மற்றும் மரக்கன்று வழங்கப்படும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் அறிவித்திருந்தது. நெகிழிகள் பூமியின் ஈரப்பதத்தைத் தடுப்பதாகவும், மனித இனத்திற்குத் தீங்கு விளைவிப்பதாகவும், மீண்டும் மஞ்சள் பையை அனைவரும் பயன்படுத்துவோம் எனவும் சபதம் ஏற்போம் என்று கோரி இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.
நெகிழிக்கு மாற்றுத் துணிகளான பைகளை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்றும் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவரிடமும் எடுத்துரைக்கப்பட்டது. இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் பல்வேறு பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள் எனத் திரளாகப் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவருக்கு அறங்காலவர் பதவி.. கொந்தளித்த மக்கள் சாலை மறியல்!