"ஐயா என் கிணத்த காணோம்" - வடிவேலு பட பாணியில் கதறிய கவுன்சிலர்! - Petition meeting
🎬 Watch Now: Feature Video
சென்னை: தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் மற்றும் கோரிக்கை மனு பெரும் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்ற அந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், ஆணையர் அழகு மீனா, மேயர் துணை மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளை எடுத்து கூறி அதனை உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது பெருங்களத்தூர் 56-வது மாமன்ற உறுப்பினர் சேகர், வடிவேலு பட பாணியில் தங்களது பகுதியில் உள்ள 'கிணற்றை காணாம்' என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எந்த வித நடவடிக்கையும் இல்லை என்று கூறிய சேகர், ஓர் தனியார் நிறுவனம் கிணற்றை மூடிவிட்டதாகவும் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்தார்.தற்போது கிணறு இருந்ததற்கான அடையாளமே தெரியாத வகையில் உள்ளதாக மாமன்ற உறுப்பினர் சேகர் கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இறுதியாக மாமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதிகாரிகள் மெத்தனமாக செயல்படாமல் மாமன்ற உறுப்பினர்கள் கொடுக்கும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தினார்.