சென்னை: அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழு அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த நிலை அறிக்கையை தமிழக அரசுத்தரப்பில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் அரங்கேறும் பாலியல் குற்றங்கள் பெற்றோரை பதட்டத்துக்கு உள்ளாக்கியுள்ளது. பள்ளி சிறுமிகள் மீதான பாலியல் சம்பவங்கள் அங்கொன்றும், இன்கொன்றுமாய் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் பரவலாக நடப்பதை பார்க்கிறோம்.
அண்மையில் கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அப்பள்ளியில் பணியாற்றி வந்த மூன்று ஆசிரியர்கள் கைதான சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. அதேபோல சென்னை பெரம்பூர் அருகே தோழியின் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற மூன்று சிறுமிகள் இரவு முழுவதும் போதை நபர்களிடம் தங்கி அத்து மீறலுக்கு உள்ளான நிகழ்வு அதிர வைத்தது. இவ்வாறு பள்ளி வளாகத்திற்குள்ளும், வெளியேவும் மாணவிகள் மீது அரங்கேறும் பாலியல் குற்றங்களை தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்கள், ஐடி உழியர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை! சிக்கிய மூவர்!
இந்த நிலையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த சப்னா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், " உயர்மட்ட குழுவின் கீழ், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கான ஆலோசனை குழு அமைக்க வேண்டும். இந்த குழு ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த 2021ல் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து அதன் தொடர்பான வழிகாட்டுதல்களையும் பிறப்பித்தது.
இருப்பினும் பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கான பாதுகாப்பு அறிவுரை குழு முறையாக இயங்குவதில்லை. ஆகவே அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கான பாதுகாப்பு அறிவுரை குழுமம் சரியாக இயங்கி பள்ளி மாணவர்களிடையே பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு, "அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு அறிவுரை குழு அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்த நிலை அறிக்கையை தமிழ்நாடு அரசுத்தரப்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.