தரமற்ற பொருட்களால் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி: கைகளால் பெயர்த்தெடுக்கும் வீடியோ வைரல்!
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ஊராட்சியில் ஏற்கனவே இருந்த பழைய அங்கன்வாடி மைய கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால், அதை அப்புறப்படுத்தி மற்றொரு அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 13 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இப்பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கிய நிலையில், புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடத்தின் அடித்தளம் மற்றும் தூண்கள் சாதாரணமாகவே கைகளால் பெயர்த்து எடுக்கும் வகையில், மிகவும் தரமற்ற முறையிலும், தரமற்ற பொருட்களை வைத்து கட்டப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றசாட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அப்பகுதி மக்கள் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடத்தின் அடித்தளத்தை கைகளால் பெயர்த்து எடுத்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளனர். இந்த அங்கன்வாடி மையம் குழந்தைகள் படிப்பதற்காக கட்டப்படுவதால் தரமற்ற முறையில் பொருட்களை வைத்து கட்டுவது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
ஆகையால் சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அங்கன்வாடி கட்டட பணியை ஆய்வு செய்து, கட்டடத்தை முழுமையாக அகற்றிவிட்டு தரமான பொருட்களை வைத்து கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.