வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எலிகள் தொல்லை.. நோயாளிகள் கடும் அவதி! - rat issue in hospital
🎬 Watch Now: Feature Video
Published : Nov 24, 2023, 2:04 PM IST
திருப்பத்தூர்: வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அதிகரித்து வரும் எலிகளின் தொல்லையால், அங்குள்ள நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கிராமங்கள் மற்றும் நகர் பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு 500-இல் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பிரசவம் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளுக்காகவும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் ஊசி போடும் அறை, குழந்தைப் பிரிவு உள்ளிட்ட சிறப்பு சிகிச்சை பிரிவுகளில் எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில், தற்போது மருத்துவமனையில் எலிகளின் அட்டகாசத்தால் பிளேக் நோய் பரவும் என்ற அச்சத்தில் உள்நோயாளிகள் உள்ளனர்.
மருத்துவமனையில் உள்ள எலிகள் உணவுகளைக் கடித்து திண்பதோடு, சில நேரங்களில் நோயாளிகள் கொண்டு வரும் பொருட்களையும் கடித்து விடுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், ஊசி போடும் அறையில் உள்ள குப்பைக் கூடைகள் மற்றும் மருந்து வைக்கப்பட்டுள்ள இடத்திலும் எலிகள் சுற்றி வருவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே, இது குறித்து மருத்துவத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் எலிகள் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.