ஊட்டி மலை ரயில் தடம் புரண்டது..! நடுவழியில் பயணிகள் அதிர்ச்சி..
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற ஊட்டி மலை ரயிலின் கடைசி 2 பெட்டிகள் மட்டும் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதால் (Ooty Hill train derailed) பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் வழக்கம்போல், இன்று (ஜூன் 8) பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், லெவல் கிராசிங் பகுதியில் தடம் புரண்டு பல் சக்கரத்தில் இருந்து கீழே இறங்கியது இதன் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் இன்று ரத்து செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்ட மலை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட 5 நிமிடத்தில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. ரயில்வே பணிமனைக்கு மிக அருகில் இது தடம் புரண்டதால் உடனடியாக பணிமனை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மலை ரயிலை தண்டவாளத்தில் நிலை நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். ரயில் பயணிகள் அனைவரும் பேருந்து மூலம் மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.