Periyakulam: 10 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் - 5 கடைகள் மீது நடவடிக்கை - தேனி பெரியகுளம் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் கெட்டுப்போன மீன் மற்றும் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் கடைகள் செயல்பட்டு வருவதாகவும் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது.
புகாரின் அடிப்படையில் பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள மீன் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சத்தீஸ்வரன் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது சில மீன் கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 10 கிலோவிற்கு மேல் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த 5 மீன் மற்றும் இறைச்சி விற்பனைக் கடைகளுக்கு உணவு பாதுகாப்புத் துறையினர் நோட்டீஸ் மற்றும் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும், இதுபோன்று கெட்டுப்போன இறைச்சிகள், உணவுகள் கடைகளில் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துச்சென்றனர்.
இதையும் படிங்க: பெங்களூரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதி; 5 பேர் கைது, பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!