ஹெத்தையம்மன் திருவிழா: பாரம்பரிய நடனங்களுடன் களைகட்டிய படுகரின கொண்டாட்டம்! - திருவிழா
🎬 Watch Now: Feature Video
Published : Jan 1, 2024, 7:10 PM IST
நீலகிாி: குன்னூர் அருகே உள்ள ஜெகதளா கிராமத்தில் படுகரின மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஹெத்தையம்மன் திருவிழா பக்தர்களின் வெள்ளத்தில் உற்சாகமாக நடைபெற்றது. நீலகிரியில் உள்ள படுகரின மக்களின் முக்கிய பண்டிகையான ஹெத்தையம்மன் பண்டிகை கடந்த சில நாளாக நடந்து வருகிறது. இந்தப் பண்டிகைக்காக நீலகிரி மாவட்டத்தில் இன்று(ஜன.1) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தைச் சுற்றியுள்ள காரக்கொரை, மஞ்சுதளா, மல்லிகொரை, பேரட்டி, ஓதனட்டி, பிக்கட்டி உட்பட ஆறு ஊர்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து விழாவைக் கொண்டாடுகின்றனர். விரதம் இருந்த ஹெத்தைக்காரர்கள் கடந்த ஏழு நாளாக காரக்கொரை கிராமத்தில் உள்ள 'மக்கமனை' என்ற கோயிலில் தங்கி, சிறப்பு பூஜை நடத்தினர். பின், ஹெத்தையம்மன் குடையை ஏந்தியவாறு, ஆறு ஊர்களில் உள்ள கோயில்களுக்கும் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
கடந்த இரு நாட்களுக்கு முன் காரக்கொரை கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூ குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். அதைத்தொடர்ந்து இன்று(ஜன.1) காலை ஆறு ஊர் படுகரின மக்கள் பாரம்பரிய உடையான வெள்ளை சீலை அணிந்து பேண்டு வாத்திய இசைக்கு மத்தியில் ஹெத்தையம்மன் குடையை ஏந்தியவாறு பாரம்பரிய நடனமாடியபடி ஜெகதளா கிராமத்துக்கு ஊர்வலமாகச் சென்றனர்.
அதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் ஜெகதளா கிராமத்தில் 'மடிமனை' என்ற இடத்தில் உள்ள ஹெத்தையம்மன் சிலையை அலங்கரித்து, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இதில் பங்கேற்ற 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சிறப்பித்தனர். இதனால் ஜெகதளா கிராமம் பக்தர்களின் வெள்ளத்தில் திணறிய நிலையில், ஜெகதளா கிரமமே விழா கோலத்தில் காணப்பட்டது. இறுதியில் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.