அதிமுக பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் ரியாக்ஷன் என்ன?
🎬 Watch Now: Feature Video
தேனி: ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவிலிருந்து நீக்கம், பொதுச் செயலாளர் பதவிகள் உள்ளிட்டவை குறித்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தொடரப்பட்டது. இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கில் முக்கிய அம்சமாக பொதுக்குழு தீர்மானங்கள் சரியா? அல்லது தவறா? என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம் உறுப்பினர்களை நீக்க அதிமுக பொதுக்குழுவுக்கு உரிமை உள்ளது என உத்தரவிட்டு ஓபிஎஸ் உட்பட 4 பேர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அதிமுகவின் எடப்பாடி அணியினர் கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். இதனிடையே, இந்த உத்தரவின் படி, ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட அரசியல் பயணம் கேள்விக்குறியாகும் என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, இதுகுறித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள், கட்சியின் மேல் நிர்வாகிகள் கருத்து அறிந்து முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத் தெருவில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஆக.25) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து கேள்விக்குப் பதிலளித்த அவர், 'தொண்டர்களாக உருவாக்கப்பட்ட இயக்கம் எனவும், தொண்டர்கள் கருத்தறிந்து முடிவு அறிவிக்கப்படும் எனவும், மேல்முறையீடு குறித்து தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கோடநாடு கொலை வழக்கு மக்களுக்கு நன்றாகத் தெரியும் எனவும், வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து அனைவருக்கும் தெரியும் எனவும், வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதன் முடிவு மக்களுக்குத் தெரியும் எனவும் கூறினார். ஓட்டுநர் கனகராஜ் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது குறித்துப் பேசிய ஓபிஎஸ், நடந்த உண்மை பற்றி தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் எனவும், பல்வேறு நிலைகளில் சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படையாகவே அவர்களின் நிலையைத் தெரிவித்துள்ளதாகவும் , இவ்வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், மக்களின் எண்ணப்படி தீர்ப்பு வரும் என்றும் கருத்து தெரிவித்தார். மேலும், 'மதுரை மாநாடு' முடிந்துபோன புளியோதரை எனக் கூறினார்.