டெல்லி:அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திரமோடி, டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்கை சந்தித்துப் பேசிய சில நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
13 பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு: எலான் மஸ்க், டெஸ்லா எலெக்ட்ரானிக் கார் உற்பத்தி நிறுவனத்தின் துணை நிறுவனர், தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இவர் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வாஷிங்டன்னில் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் டெஸ்லா நிறுவனம் அதன் இணையதளத்தின் வேலைவாய்ப்பு பக்கத்தில் மும்பையில் 13 பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறது. இது தவிர லிங்க்ட்இன் சமூக வலைதளத்திலும் இதற்கான விளம்பரத்தை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சேவை ஆலோசகர், உதிரி பாகங்கள் ஆலோசகர், சேவை தொழில்நுட்ப நிபுணர், சேவை மேலாளர் (இந்த நான்கு வேலைவாய்ப்புகளும் வாகன நிறுவன்த்தின் சேவைப் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்படுகின்றனர்), டெஸ்லா ஆலோசகர், ஸ்டோர் மேலாளர்(விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை), வணிக செயல்பாடு ஆய்வாளர், விநியோக செயல்பாடு சிறப்பு நிபுணர், ஆர்டர் செயல்பாடு சிறப்பு நிபுணர் (இந்த மூன்று பதவிகளும் செயல்பாடு மற்றும் வணிக ஆதரவு பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்) வாடிக்கையாளர் ஆதரவு கண்காணிப்பாளர், வாடிக்கையாளர் ஆதரவு சிறப்பு நிபுணர், வளாக விற்பனை ஆலோசகர், வாடிக்கையாளர் ஈடுபாடு மேலாளர்(இவை அனைத்தும் விற்பனை& வாடிக்கையாளர் ஆதரவு பிரிவில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.)
சுங்கவரி குறைப்பு: டெஸ்லா வெளியிட்டுள்ள வேலை குறித்த விவரங்களில், கடின உழைப்புடன், நாம் வாழும் உலகின் மாறி வரும் தன்மையை பற்றிய ஆர்வம், கொள்முதல் ஆர்டர் உறுதிப்படுத்துதல் முதல் விநியோகம் மற்றும் வருவாய் அங்கீகாரம் வரையிலான ஆர்டர் சுழற்சியில் தினமும் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை வெற்றிக்கரமாக தலைமையேற்று நடத்தும் திறன் படைத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் 40,000 டாலர் வரையிலான அதிநவீன கார்களுக்கான அடிப்படையான சுங்க வரியை 110 சதவிகித த்தில் இருந்து 70 சதவிகிதமாக குறைத்திருக்கும் தருணத்தில் இந்தியாவில் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் அறிவிப்பை டெஸ்லா வெளியிட்டுள்ளது. இந்திய சந்தைக்கு ஏற்ப மேலும் ஏற்ற விலையிலான பிரிவில் டெஸ்லா நிறுவனம் கார்கள் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக எலான் மஸ்க் ஒரு யோசனையை முன் வைத்திருந்தார். ஆனால், இதில் அடுத்த கட்ட நகர்வு மேற்கொள்ளப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்காவில், தமது மூன்று குழந்தைகள் சூழ எலான் மஸ்க் சந்தித்துப் பேசினார். அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டொனால்டு டிரம்ப், "எலான் மஸ்க் ஏன் இந்திய பிரதமரை சந்தித்துப் பேசினார் என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் எலான் மஸ்க் இந்தியாவில் வணிகம் செய்ய விரும்புகிறார். அவர் ஒரு நிறுவனத்தை நடத்தி வருவது உங்களுக்குத் தெரியும், அது குறித்துத்தான் அவர் பேசியிருப்பார் என்ற சாத்தியம் உள்ளது," என்று கூறியிருந்தார்.
கவுரமான சந்திப்பு:இதன் தொடர்ச்சியாக இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த செய்தியில், இந்தியா-அமெரிக்கா இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், மேலும் எலான் மஸ்க் நிறுவனம் தொழில் முனைவு மற்றும் நல்லாட்சிக்கு புதுமை படைத்தல், விண்வெளி ஆய்வு, செயற்கை நுண்ணறிவு , நீடித்த வளர்ச்சியில் ஈடுபடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடியை சந்தித்தபின்னர் கருத்துத் தெரிவித்த எலான் மஸ்க், அவரை சந்தித்தது கவுரமாக இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், "எலான் மஸ்க் குடும்பத்தினரை சந்தித்துப் பேச உள்ளது மகிழ்ச்சி அளிக்கும் தருணமாகும். விண்வெளி, போக்குவரத்து, தொழில்நுட்பம், புதுமை படைத்தல் ஆகிய எலான் மஸ்கின் ஆர்வமுள்ள துறைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தோம். மறுசீரமைப்பு, வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் குறைந்தபட்ச அரசு, அதிபட்ச ஆளுகை என்ற இந்தியாவின் முன்னெடுப்பு குறித்தும் நாங்கள் ஆலோசனை செய்தோம்," என்று தெரிவித்திருந்தார்.
நீண்டகால எதிர்பார்ப்பு: இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனம் நுழைவது என்பது நீண்டநாட்களாக எதிர்பார்க்க ஒன்றாகும். கடந்த எப்ரல் மாதம் எலான்மஸ்க் இந்தியா வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் வேறு பணிகள் காரணமாக அந்தப் பயணத்தை எலான் மஸ்க் ரத்து செய்தார். எனினும், இந்தியாவில் டெஸ்லா மின்னணு கார்களை விற்பனை செய்வதை முன்னெடுக்கும் முடிவை விரைவில் அவர் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
புதிய மின்னணு வாகனக் கொள்கையின் கீழ் இந்தியாவில் குறைந்தபட்சம் 500 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி சலுகை அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த முக்கியமான நகர்வு டெஸ்லா உள்ளிட்ட முக்கிய கார் நிறுவனங்களை ஈர்த்திருக்கிறது.