வேலூர்: காப்புக் காட்டில் செம்மர கடத்தல்.. கட்டைகளை விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!
🎬 Watch Now: Feature Video
Published : Nov 7, 2023, 10:11 PM IST
வேலூர்: குடியாத்தம் அடுத்த அனுப்பு கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சுமார் 20000 செம்மரங்கள் உள்ளன. ஆந்திர மாநிலம் திருப்பதி பகுதியில் உள்ள செம்மரக்காட்டிற்கு நிகராக வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அனுப்பு கிராமத்தில் உள்ள இந்த காட்டில் செம்மரங்கள் உள்ளன என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த காப்புக்காட்டில் உள்ள செம்மரங்கள் சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களாகும். இந்த காப்புக் காட்டில் இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து குடியாத்தம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு காப்புக்காட்டில் மரங்களை அறுக்கும் சத்தம் கேட்டு வனத்துறையினர் ரோந்து சென்றுள்ளனர். அப்போது வனத்துறையினர் வருவதைக் கண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் காப்புக் காட்டில் ஆய்வு செய்த போது அங்கு சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆறு மரங்கள் இயந்திரம் மூலம் வெட்டி துண்டாக்கப்பட்டது தெரியவந்தது.
பின்னர் வேலூர் மாவட்டம் வனத்துறை அதிகாரி DFO கலாநிதி அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்தில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற மர்ம நபர்களை வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர். காப்புக் காட்டில் உள்ள 40 ஆண்டு பழமை வாய்ந்த செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.