கொடைக்கானல் சாலையில் ஹாயாக உலா வந்த காட்டெருமைக் கூட்டம்! - உலா வந்த காட்டெருமைகளால் வாகன ஓட்டிகள் அச்சம்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: கொடைக்கானலில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொடைக்கானல் மலைக் கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளாவரை மற்றும் வில்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி, பேத்துப்பாறை உள்ளிட்டப் பல்வேறு கிராமங்களில் விவசாயமே பிரதானத் தொழிலாக உள்ளது.
இந்த நிலையில் வனவிலங்குகளான காட்டெருமை, மான், பன்றி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை சேதப்படுத்தியும், நகர் பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியும் வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானல், நாயுடுபுரம் செல்லக்கூடிய பிரதானச் சாலையில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வந்தது.
உலா வந்த காட்டெருமைகளால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் பெரும் அவதி அடைந்தனர். காட்டெருமைகள் சாலையை வழி மறித்து நின்றதால் நீண்ட தூரம் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டது. இதனால் அன்றாடத் தேவைகளுக்கும் செல்ல முடியாமல் தொடர்ந்து மக்கள் தவித்து வருகின்றனர்.
மேலும் அப்பகுதியின் வழியே பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டது. எனவே, காட்டெருமைக் கூட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது. காட்டெருமைக் கூட்டம் அப்பகுதியில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.