சூறைக் காற்றால் முறிந்து விழுந்த வாழை மரங்கள் - கண்கலங்கும் விவசாயிகள் - Banana Plants Damaged In Strong Wind
🎬 Watch Now: Feature Video
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை, வதம்பச்சேரி, செஞ்சேரிபுத்தூர், செஞ்சேரிமலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழைக் குலைகள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக சுல்தான்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. அறுவடைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த தகவலின் பேரில் வருவாய் அலுவலர்கள் மற்றும் வேளாண் அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியருக்கு தோட்டக்கலை துறையினரால் அறிக்கை தயார் செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சூறைக்காற்றில் வாழை மரங்கள் முற்றிலுமாக முறிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது மிகவும் வருத்தம் அளிக்கிறது. தற்போதைய சூழலில் எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை உடனேயே வழங்கினால் மட்டுமே எங்களால் மீள முடியும் எனத் தெரிவிக்கின்றனர்.