வேலூரில் மேம்பாலம்? எம்.எல்.ஏ. ஆதங்கத்தில் பேசுகிறார்! அமைச்சர் எ.வ.வேலு கூறியது யாரை? - வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்
🎬 Watch Now: Feature Video
சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பேசுகையில், "வேலூர் தொகுதியில் நேஷனல் தியேட்டரில் இருந்து ஆற்காடு சாலை அப்படியே மண்டி தெருவில் மேம்பாலம் இறங்குவது போன்று வேலூரில் மேம்பாலம் அமைக்க வேண்டும்" என்றார்.
இதற்கு அமைச்சர் ஏ.வ.வேலு பதில் அளித்து பேசியதாவது, "வேலூர் நேஷனல் தியேட்டர் என்பது ஒரு காலத்தில் புகழ்பெற்ற தியேட்டர் அங்கிருந்து கிருஷ்ணா நகர் வரைக்கும் அந்த மேல்மட்ட பாலத்தை அமைக்க வேண்டும் என்பது தான் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை. ஏற்கனவே அவர் என்னிடத்தில் இது குறித்து கடிதம் தந்திருக்கிறார். ஒன்று அதைச் செய்ய வேண்டும், இன்னொன்று புகழ்பெற்ற சிஎம்சி மருத்துவமனைக்கு அருகே ஒரு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், இந்த இரண்டு கருத்துகளை என்னிடத்திலே கடினமாக தந்திருக்கிறார்.
சிஎம்சி நிர்வாகத்தில் பேசி ஒரு பகுதியை, சிஎம்சி சார்ந்த இடங்களை நமக்கு கொடுத்தால் தான் சுரங்கப்பாதை அமைக்க முடியும். அந்த இடத்தை நீங்கள் வாங்கித் தாருங்கள் சுரங்கப்பாதை போடுகிறோம் என்று நான் ஏற்கனவே அவருக்கு வாக்குறுதியை கொடுத்திருக்கிறேன். அந்த பணிகளை அவர் மேற்கொள்ள வேண்டும் என்பது ஒன்று, அதே போல் நேஷனல் தியேட்டரில் இருந்து கிருஷ்ணா நகர் வரைக்கும் மேல்மட்ட பாலத்தை அமைக்க வேண்டும் என்று சொன்னார்.
மேலும் வேலூரில் மிகவும் புகழ் பெற்ற வியாபார ஸ்தலங்கள், 30 முதல் 40 ஆண்டு காலம் வியாபாரம் செய்கிற பல்வேறு கடைகள் இருக்கின்றன. அவை எல்லாம் பாதிக்கப்படும் எனவே துறையினுடைய வரைபடம் சம்பந்தப்பட்ட தலைமை பொறியாளரை அழைத்து ஆய்வு செய்யப்படும். சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு ஆர்வம், என்னவென்று சொன்னால் எல்லா நகரங்களிலும் எல்லா மாநகராட்சிகளிலும் திருச்சி, மதுரை, கோவையில் மேம்பாலம் கட்டுகிறார்கள்.
அதுபோன்று புகழ் பெற்ற நமது வேலூரில் இருக்க வேண்டும் என்று ஆதங்கத்தில் தான் என்னிடத்திலே கூறியுள்ளார். முறையாக இந்த வியாபார ஸ்தலங்கள் எல்லாம் பாதிக்கப்படாத அளவிற்கு அந்த வரைபடம் வருமேயானால் முதலமைச்சரின் அனுமதியோடு வேலூரில் பாலம் கட்டுவதற்கு இந்த அரசு முயற்சி செய்யும்" எனக் கூறினார்.