கீழ்பவானி வாய்க்கால் பணிகள் விரைந்து முடிக்க அமைச்சர் முத்துசாமி உத்தரவு! - வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து அஞ்சூர் மங்கலப்பட்டி வரை சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு உள்ள கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலமாக ஆண்டு தோறும் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இது தவிர கீழ்பவானி பாசன வாய்க்காலின் 8 இடங்களில் நீர்வள ஆதாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், பாலம் அமைக்கும் பணியும் விவசாயிகள் ஒப்புதல் அளித்த இடங்களில் பக்கவாட்டுச் சுவர் அமைக்கும் பணியும் கடந்த மே மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கீழ்பவானி பாசன வாய்க்காலில் ஆகஸ்ட் 15ம் தேதி தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூடக்கரை, ஆண்டிபாளையம், எலத்தூர் செட்டிபாளையம் உள்ளிட்ட இடங்களில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வைத் தொடர்ந்து அமைச்சர் கூறும் போது, “ஆகஸ்ட் 15ம் தேதி கீழ்பவானி பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும். ஓரிரு இடங்களில் பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது, கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இப்பகுதிக்கு தண்ணீர் வருவதற்குள் பணிகள் அனைத்தும் முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கீழ்பவானி வாய்க்காலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து முதலமைச்சர், அதிகாரிகளிடம் தினம் தோறும் ஆய்வு செய்து வருகிறார். அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளையும் முதலமைச்சர் நாள்தோறும் கண்காணித்து வருகிறார். ஆகவே திட்டமிட்டவாறு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்" என்றார்.