பூம்புகார் சுற்றுலா தளத்தின் மேம்பாட்டுப் பணி: அடிக்கல் நாட்டிய அமைச்சர் மெய்யநாதன் - Mayiladuthurai District Collector AP Mahabharathi
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: சீர்காழி அருகே ரூ.23.60 கோடி மதிப்பிலான பூம்புகார் சுற்றுலா தளம் மேம்படுத்துதல் பணிகளை தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த பூம்புகாரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா தளத்தை பல்வேறு உள்கட்டமைப்புகளுடன் கூடிய உலக தரத்தில் மேம்படுத்துவதற்கானப் பணிகள் இன்று (ஏப்.26) தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக ரூபாய் 23 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் ஆன பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணியைத் துவக்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மெய்யநாதன், 'கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் தலைவர் கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட 'பூம்புகார் சுற்றுலா தளம்' ஆகும் என்றார். இதனை, தற்பொழுது உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மாற்றும் பணியை தமிழக அரசு தொடங்கி உள்ளதாகவும், ஏற்கனவே, கடந்த ஆண்டு மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், தற்போது இரண்டாவது கட்டமாக ரூபாய் 23.60 கோடி மதிப்பிலான பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில், மாவட்டச் செயலாளர் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆன நிவேதா.எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், சீர்காழி ஒன்றியப் பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், பூம்புகார் மீனவ பஞ்சாயத்தார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.