சிம்ஸ் பூங்கா பழக்கண்காட்சியில் அத்திப்பழம்.. நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி!
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: மருத்துவ குணமிக்க அத்திப்பழங்கள் மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் விளையத் துவங்கியதால் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் வருகிற சனிக்கிழமை (மே 27) நடக்கவுள்ள 63-வது பழக்கண்காட்சியில் இவைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது.
மேலும், தேயிலைத் தோட்டத்தில் ஊடுபயிராகக் காபி, ஏலக்காய் விவசாயமும் மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர ஆரஞ்சு, கொய்யா, சீதா, அத்தி, எலுமிச்சை, உள்ளிட்ட பழ வகைகளும் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குன்னூர், மஞ்சூரில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் அத்திப்பழம் கொத்து கொத்தாகக் காய்த்துள்ளன.
இதனை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். சில தோட்ட உரிமையாளர்கள் அத்திப்பழங்களைப் பறித்து அதை உலர வைத்து பாக்கெட்டுகளில் அடைத்து உதகை, குன்னூர், கோவை உள்ளிட்ட சந்தைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.
‘பைகஸ் கேரிகா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட அத்திப்பழம் ஆஸ்திரேலியா மற்றும் மலேசியாவை அடுத்து, இந்தியாவில் அதிக அளவில் விளைகிறது. இந்த பழத்தில் நார்ச்சத்துடன் இரும்புச் சத்தும் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த பழத்தில் 45 சதவீத கலோரி மற்றும் வைட்டமின் ஏ மற்றும் சி அடங்கி உள்ளது.
மருத்துவ குணமிக்க இந்த அத்திப் பழங்கள் வரும் சனிக்கிழமை துவங்கவுள்ள கோடை சீசனின் இறுதி நிகழ்ச்சியான 63-வது பழக் கண்காட்சியில் இடம்பெற உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் அரசு பேருந்துக்குள் ஒழுகிய மழைநீர்.. குடை பிடித்தபடி பயணம் செய்த மக்கள்!