கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் பகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்புற சமுதாய நல மையத்தினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து வடவள்ளி, தாளியூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.58.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது சுகாதார அலகு கட்டடங்களையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மக்களவை உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், "சுகாதார துறையில் ஏற்கனவே இருக்கின்ற பழைய கட்டிடத்திற்கு கூடுதலாக புதிய கட்டிடம் கட்டப்படுகின்றது. அந்த இடங்களில் புதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டியது இல்லை.
மருத்துவத் துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்தாளுநர்கள் பணியிடங்கள் நியமனம் செய்யப்படுகிறது. விரைவில் 2253 மருத்துவர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 1066 சுகாதார ஆய்வாளர் நியமனம் குறித்து 38 வழக்குகள் போட்டிருக்கின்றனர். இந்த வழக்கு போட்டவர்களை அழைத்து பேசி வருகிறோம். காலியாக இருந்த மருத்துவ கல்லூரி முதல்வர்கள் பணி நியமனம் நேற்று (அக்.3) செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை, 13 வகையான தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது.
இதையும் படிங்க: தவெக மாநாட்டை தடை செய்ய போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி!
மழைக்கால முன்னெச்சரிக்கை: மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பருவமழை வரும் போது எடுக்க வேண்டிய நடவ்டிககைகள் குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனையானது நடத்தப்பட்டு வருகிறது. அக்.15க்கு பின்பு தேவையான இடங்களில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி: தமிழகத்தில் எங்கே டெங்கு இருக்கின்றது என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொல்ல வேண்டும். டெங்கு இறப்பு அதிமுக ஆட்சியில்தான் அதிகம். அதிமுக ஆட்சியில் 2012ஆம் ஆண்டும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 66 பேர் இறத்துள்ளனர். மேலும் 2017ஆம் ஆண்டு 65 பேர் என தமிழக வரலாற்றில் அதிகப்படியான டெங்கு இழப்புகள் அதிமுக ஆட்சி காலத்தில் நிகழ்ந்தவை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டில் டெங்குவால் உயிரிழந்தவர்கள் ஆறு பேர் தான். அதுவும் தனியார் மருத்துவமனை, முறையான சிகிச்சை இல்லாததால் நோய் எதிர்ப்பு சிகிச்சை இல்லாததால் போன்ற காரணங்களால் நிகழ்ந்த உயிரிழப்பு. தமிழகத்தில் டெங்கு பாதிப்பு எங்கேயுமே இல்லை. எனவே எடப்பாடி பழனிசாமி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்