சூரத்: பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்தியதற்காக ரூ.15 கோடி இழப்பீடு மற்றும் வரி, வழக்கு கட்டணமாக ரூ.1.25 லட்சம் சேர்த்து வழங்க கோரி, சூரத்தை சேர்ந்த பானி பூரி தயாரிக்கும் நிறுவனத்துக்கு போலியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது குறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையர் (ஏசிபி) ஸ்வேதா டேனியல் கூறுகையில், “குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்த ஜல்பூரி ஃபுட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளருக்கு, நடிகர் சல்மான் கானின் பெயரில் 4 பக்க சட்டப்பூர்வ நோட்டீஸ் ஒன்று கடந்த 30ம் தேதி வந்துள்ளது.
எஸ்எஸ்ஆர் அசோசியேட்ஸ் என்ற பெயரில் வருமான வரி சட்டத்தின் கீழ் மின்னஞ்சல் மூலம் அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் பானிபூரி நிறுவனம், நடிகர் சல்மான் கானின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, ரூ.15 கோடி இழப்பீடு மற்றும் வரி, வழக்கு கட்டணமாக ரூ.1.25 லட்சம் சேர்த்து வழங்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: டெல்லி அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லத்தை காலி செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால் !
இந்நிலையில், எஸ்எஸ்ஆர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் முகவரி நொய்டாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட் நிலையில், பானி பூரி நிறுவன உரிமையாளர் அதுகுறித்து இணையத்தில் தேடியபோது, அந்தப் பெயரில் பதிவு செய்யப்பட்ட கன்சல்டன்சி நிறுவனம் இல்லை என்பதை கண்டுபிடித்தார்.
இதற்கிடையே, பானி பூரி நிறுவனத்தின் வரி ஆலோசகர் பகீரத் கலாத்தியா, சல்மான் கான் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் தொடர்பு உள்ள மும்பையைச் சேர்ந்த தினேஷ் ராவ் என்பவரை தனக்கு தெரியும் என்றும், ரூ.4 கோடி வங்கிப் பரிமாற்றமும், ரூ.1.5 கோடி ரொக்கமாகவும் வழங்கினால் இந்த விவகாரத்தை ஃபைசல் செய்யலாம் என்றும் பானிபூரி நிறுவன உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பகீரத் கலாத்தியா மீது சந்தேகமடைந்த பானி பூரி நிறுவன உரிமையாளர் இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் அளித்தார். விசாரணையில், எஸ்எஸ்ஆர் அசோசியேட்ஸ் கன்சல்டன்சி நிறுவனம் போலியானது என்றும், பகீரத் கலாத்தியா பணம் பறிக்கும் நோக்கில் இந்தச் செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்