மாசி பெருவிழா: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் தேர் பவனி! - ஐந்தாம் படை வீடு
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர்: தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. இந்த திருத்தணி அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் மாசி பெருவிழா கடந்த பிப்.27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் உற்சவர் முருகப்பெருமான் திருக்கோயிலில் மாடவீதியில் தினந்தோறும் ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி காலை மற்றும் மாலை திருக்கோயில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார். அந்த வகையில், உற்சவர் முருகப்பெருமான் மலைக்கோயிலின் மாட வீதிகளில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் பவனி வந்து காட்சியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏழாம் நாளான வெள்ளிக்கிழமை மாலை உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளி சிறப்பு தங்க ஆபரணங்கள் நிறைந்த புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளினார். அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருக்கோயில் மாட வீதியில் உலா வந்து உற்சவர் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, அங்கு இருநூற்றுக்கும் அதிகமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.