மார்கழி முதல் நாள்.. வண்ண கோலமிட்டு வரவேற்ற பெண்கள்!
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: தமிழ் மாதங்களில், மார்கழி மாதத்தில் அதிகாலையில் வீட்டு வாசலில் பச்சரிசி மற்றும் வண்ணப் பொடிகளால் கோலம் போட்டு, அதன் நடுவில் சாணத்தால் பிள்ளையார் செய்து வைத்து, அதில் மஞ்சள் நிறமான பூசணிப்பூவை வைப்பது தமிழர்களின் வழக்கம். அதை வைக்கும் இல்லங்களில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது நம்பிக்கை. மார்கழி மாதம் முதல் தை மாதம் பொங்கல் முடியும் வரை இவற்றை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இன்று மார்கழி முதல் நாள் தொடங்கிய நிலையில், திருவண்ணாமலை அடுத்த மங்கலம்புதூர் கிராமத்தில் வீடுதோறும் வாசலில் தண்ணீர் தெளித்து, வண்ண கோலமிட்டு பூசணிப்பூ வைத்து, விளக்கேற்றி அழகுபடுத்துவதில் பெண்கள் ஆர்வம் காட்டினர்.
மார்கழியில் காலையில் எழுவதன் மூலமாக சுத்தமான ஆக்சிஜன் சுவாசக் காற்று, உடல் ஆரோக்கியம் மற்றும் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாகவும் நம்பிக்கை உள்ளது. மேலும், முன்னோர்கள் தங்கள் வீடுகளில் திருமண வயதில் பெண், மகன் இருப்பதை குறிக்கும் விதமாக வாசலில் கோலமிட்டு சாணத்தில் பிள்ளையார் செய்து, அதில் பூசணிப்பூ அல்லது செம்பருத்தி பூ வைப்பதன் மூலம் அவ்வழியாகச் செல்லும் பயனர்கள் அதனைப் பார்வையிட்டு தகவல் தெரிந்து கொள்வார்கள் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.