அரசு மதுபான கடையில் புகுந்து ஊழியருக்கு கொலை மிரட்டல் - தஞ்சாவூர் மாவட்ட செய்தி
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் - தஞ்சை சாலை தாராசுரம் காய்கறி சந்தை அருகே இரண்டு அரசு மதுபான கடைகள் உள்ளது. எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த மதுக் கடை ஒன்றில், ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் கையில் அரிவாளுடன் கடைக்குள் புகுந்துள்ளனர்.
அப்போது கடையில் இருந்த சூப்பர்வைசர் முத்து கிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அங்கு இருந்த மது பாட்டில்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தியதாகவும் முத்து கிருஷ்ணன் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் டாஸ்மாக் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தாராசுரத்தைச் சேர்ந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் மேலும் சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல், மதுபான கடைக்கு அருகில் பெட்டி கடை நடத்தி வரும் பிரசாந்த்திடமும் அந்த கும்பல் தகராறு செய்து அவரை தாக்கியதில் பிரசாந்த் கழுத்தில் காயம் ஏற்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் பிரசாந்தும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அரசு மதுபான கடை அருகில் இருந்த பிற கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.