தண்ணீர் தொட்டியில் உற்சாக குளியல் போடும் தெய்வானை யானை!
🎬 Watch Now: Feature Video
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமாக நீர் நிறைந்த தண்ணீர் தொட்டியில் மிக ஆனந்தமாக துள்ளி குதித்து திருப்பரங்குன்றம் கோயில் யானை விளையாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழாவின் சிகர நிகழ்வுகளான திருக்கல்யாண வைபவம், திருத்தேரோட்டம் ஆகியவை கோலாகலமாக நடைபெற்று முடிந்து உள்ளன.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானைக்காக உருவாக்கப்பட்ட குளியல் தொட்டியில், கொளுத்தும் வெயிலுக்கு இதமாக கோயில் யானை உருண்டு புரண்டு விளையாடி மகிழ்ந்தது. தெய்வானை யானையின் இந்த உற்சாகக் குளியல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்தக் காணொளி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் ஈர்த்து வருகிறது. சமீப காலங்களாக கோயில் யானைகளின் விளையாட்டுகள் நிறைந்த அசைவுகள் பலராலும் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது.