குறிச்சிகுளம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம் கோலாகலம்!
🎬 Watch Now: Feature Video
தென்காசி: ஆலங்குளம் அருகே குறிச்சிகுளம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம் நேற்று (நவ. 4) கோலாகலமாக தொடங்கியது.
தென்காசி மாவட்டம், மானூர் அருகே குறிச்சிகுளத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் பிரசித்தி பெற்ற பள்ளிவாசல்களில் ஒன்றாகும். இந்த முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை முன்னிட்டு, மாலை 6 மணிக்கு கொடி ஊர்வலம் தொடங்கி, ஒட்டகத்தில் பிறைக்கொடி மேள தாளம் முழங்க வான வேடிக்கையுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அருகிலுள்ள தெற்குப்பட்டி, குறிச்சிகுளத்தில் ஊர்வலம் நடைபெற்று, இரவு 10 மணிக்கு மீண்டும் குறிச்சிகுளம் திரும்பி, பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, இன்று (நவ. 5) ஞாயிற்றுக்கிழமை, இரவு ஏழு மணிக்கு தீப விளக்கும், 8 மணிக்கு மௌலூது சரிப் நடைபெறும். கந்தூரி விழாவை முன்னிட்டு ஆந்திரா, மும்பை, சென்னை, கடையநல்லூர், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தென்காசி விரைந்து உள்ளனர்.
கொடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை கந்தூரி விழா கமிட்டியினர் செய்தனர். விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையில், போலீசார் ஈடுபட்டனர். ஆண்டுதோறும் யானை மீது கொடி ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், வனத்துறையின் கட்டுப்பாட்டால் யானை மீது கொடி ஊர்வலம் நடைபெறாமல், அதற்கு பதில் ஒட்டகத்தின் மீது கொடி ஊர்வலம் நடைபெற்றது குறிப்பிடதக்கது.