கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயில் தேரோட்டம்!
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாசி மகப்பெருவிழா 12 சைவத்திருக்கோயில்கள் மற்றும் 5 வைணவத்திருக்கோயில்கள் இணைந்து பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு இவ்விழா ஆதிகும்பேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காசிவிஸ்வநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் மற்றும் கௌதமேஸ்வரர் என ஆறு சைவ திருக்கோயில்களில் கடந்த மாதம் 25-ம் தேதியும் சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி மற்றும் ஆதிவராகப்பெருமாள் ஆகிய மூன்று வைணவ திருக்கோயில்களில் கடந்த 26-ம் தேதியும் இந்த உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் திருவீதியுலாவும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வைணவத் தலங்களில் 9ம் நாளான இன்று, மாசிமகத்தினை முன்னிட்டு கும்பகோணம் சக்கரபாணிசுவாமி திருக்கோயிலில் உற்சவர் சுதர்சனவள்ளி மற்றும் விஜயவள்ளி தாயார் சமேத சக்ரபாணிசுவாமி நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு புதிய பட்டு வஸ்திரங்கள், பல வண்ண நறுமண மலர் மாலைகள் சூட்டியபடி எழுந்தருளினர்.
ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தும், வடம் பிடித்திழுத்தும் மகிழ்ந்தனர். தேரோட்டத்தில் 76 அடி உயரமும் 26 அடி அகலமும், 50 டன் எடையும் கொண்ட இத்தேரினை எந்தவிதமான இயந்திர உதவியும் இன்றி முற்றிலும் மனித சக்திகளே இழுக்கவும், திருப்பவும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.