சென்னை : சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது சீசன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வருகிறது.
மாஸ்டர்ஸ் பிரிவு : இந்த தொடரின் 5-வது நாளான இன்று (நவ 9) 5-வது சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் போர்டில் இந்தியாவின் விதித் குஜ்ராத்தி, ஈரானின் அமீன் தபதாபேயியுடன் மோதினார். இந்த ஆட்டம் 57-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
2-வது போர்டில் அமெரிக்காவின் லெவோன் அரோனியன், பிரான்ஸின் மாக்சிம் வாச்சியர் லாக்ரேவை சந்தித்தார். இதில், வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய லெவோன் அரோனியன் 44-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். 3-வது போர்டில் செர்பியாவின் அலெக்ஸி சாரானா, இந்தியாவின் அரவிந்த் சிதம்பரத்துடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் 33-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 4-வது போர்டில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அர்ஜுன் எரிகேசி, ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில், அர்ஜுன் எரிகேசி வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். இந்த ஆட்டம் 44-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.
7 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 5 சுற்றுகளின் முடிவில் அர்ஜுன் எரிகேசி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். லெவோன் அரோனியன் 3.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அமீப் தபதாபேயி 3 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அரவிந்த் சிதம்பரம் 2.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ் 2 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
சேலஞ்சர்ஸ் பிரிவு : சேலஞ்சர்ஸ் பிரிவில் 5 வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில், முதல் போர்டில் பிரனேஷ், லியோன் மென்டோன்காவுடன் மோதினார். இந்த ஆட்டம் 47-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 2-வது போர்டில் பிரணவ், ரவுனக் சத்வானியை சந்தித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது..விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம் இதோ!
இதில், வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரணவ் 39-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிரா செய்தார். தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவு செய்த பிரணவ் முதன்முறையாக டிரா செய்துள்ளார். 3-வது போர்டில் ஹரிகா துரோணவல்லி, ஆர்.வைஷாலியை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டம் 41-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. 4-வது போர்டில் அபிமன்யு புராணிக், கார்த்திக்கேயன் முரளியுடன் மோதினார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய கார்த்திக்கேயன் முரளி 59-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
7 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 5 சுற்றுகளின் முடிவில் பிரணவ் 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். லியோன் மென்டோன்கா 3.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ரவுனக் சத்வானி 3 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், பிரனேஷ் 2.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், கார்த்திக்கேயன் முரளி 2.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
நாளைய போட்டிகள் : 6-வது நாளான நாளை (10.11.2024) 6-வது சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் மாஸ்டர்ஸ் பிரிவில், அமீன் தபதாபேயி, பர்ஹாம் மக்சூட்லூவுடன் மோதுகிறார். அரவிந்த் சிதம்பரம், அர்ஜுன் எரிகேசியுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். மாக்சிம் வாச்சியர் லாக்ரே, அலெக்ஸி சாரானாவுடனும், விதித் குஜ்ராத்தி, லெவோன் அரோனியனுடனும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
சேலஞ்சர்ஸ் பிரிவில் லியோன் மென்டோன்கா, கார்த்திக்கேயன் முரளியுடன் மோதுகிறார். ஆர்.வைஷாலி, அபிமன்யு புராணிக்கை எதிர்கொள்கிறார் ரனவுக் சத்வானி, ஹரிகா துரோணவல்லியை சந்திக்கிறார். புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் பிரணவ், பிரனேஷுடன் மோதுகிறார்.